சென்னை : துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர், கடலில் விழுந்து பலியான சம்பவம் குறித்து,
அவரது தாய், துறைமுக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புதுவண்ணாரப்பேட்டையை
சேர்ந்தவர் சரவணன், 38. இவர், எண்ணெய் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில்
பணியாற்றினார். கடந்த இரு தினங்களுக்கு முன் எண்ணெய் நிறுவனத்துக்கு,
மும்பையில் இருந்து கப்பல் மூலம் எண்ணெய் வந்தது.
குழாய் மூலம், எண்ணெயை கப்பலில் இருந்து துறைமுகத்திற்குள் கொண்டு செல்லும் பணியை, சரவணன் மேற்கொண்டார்.
இந்நிலையில்,
நேற்று முன் தினம் காலை எண்ணெய் கப்பலுக்கு அருகே கடலில், சரவணனின் அடை
யாள அட்டை மட்டும் மிதந்த படி இருந்தது. சரவணனை காணவில்லை.
இதுகுறித்து
துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சரவணன் கடலில் தவறி
விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரது உடலை போலீசார்
தேடி வந்தனர். அதில், நேற்று காலை உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து, சரவணனின் தாயார் பச்சையம்மாள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரில்,
சரவணன் வேலை செய்த எண்ணெய் நிறுவன மேலதிகாரிகள், சரவணனை "டார்ச்சர்'
செய்ததாகவும், இதுதொடர்பாக அவர், அடிக்கடி தன்னிடத்தில் வருத்தப்பட்டு
பேசியதாகவும், எனவே அவர் கடலில் தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும்,
அவர் தெரிவித்துள்ளார்.
புகார் குறித்து, துறைமுக காவல் நிலைய ஆய்வாளர் ராமலிங்கம் விசாரிக்கின்றார்.