சென்னை :
ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது, மளிகை
பொருட்களையும் வாங்கும்படி, விற்பனையாளர்கள் வலியுறுத்துவதை கண்டித்து,
புளியந்தோப்பில், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
புளியந்தோப்பு,
டிக்காஸ்டர் சாலையில், அமுதம் நியாய விலைக்கடை (எண்: 55) உள்ளது. இந்த
கடையில், இரண்டாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொருட்கள்
வழங்கப்படுகின்றன.
இதில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை
பயனாளிகள் வாங்கும் போது, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட, மளிகை பொருட்களை
வாங்க வேண்டும் என, விற்பனையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனால்,
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க, பயனாளிகள் அதிகளவு பணம் எடுத்து வர
வேண்டியுள்ளது. புளியந்தோப்பில், இதுபோன்று விற்பனையாளர்கள் தொடர்ந்து
நச்சரித்து வருவதால், ஆத்திரமடைந்த பயனாளிகள் நேற்று, காலை 10:00 மணிக்கு,
ரேஷன் கடையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
புளியந்தோப்பு போலீசாரின், சமாதான பேச்சு வார்த்தைக்கு பிறகு, கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, ரேஷன் கடை விற்பனையாளர் கூறுகையில், "மற்ற பொருட்களை
விற்கும்படி உயர் அதிகாரிகள் எங்களை கட்டாயப்படுத்துகின்றனர். அதனால் தான்,
குடும்ப அட்டைதாரர்களுக்கு, மளிகை பொருட்களை கொடுக்கிறோம்,' என்றார்.