விருத்தாசலம் : காய்கறிகள்,
பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை கெடாமல் பாதுகாக்க, கடலூர்,
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிகளில், 67.8 லட்சம் ரூபாய் மதிப்பில்
குளிர்சாதன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கத்தரி,
வெண்டை, அவரை, பீர்க்கன், வெள்ளரி, புடலை, மிளகாய், மல்லி மா, பலா,
முந்திரி, வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
விளைந்த காய்கறிகள், பழங்களை அறுவடை செய்து, சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
அதைத்
தொடர்ந்து காய்கறிகள், பழங்களை பாதுகாக்க குளிர்சாதன குடோன்கள் அமைக்க
விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையேற்று, கடலூர், விருத்தாசலம் மார்க்கெட்
கமிட்டிகளில், 67.8 லட்சம் ரூபாய் மதிப்பில் குளிர்சாதன கிடங்குகள்
அமைக்கப்பட உள்ளது.
கடலூர் மாவட்ட விற்பனைக்குழு செயலர் ஹரிதாஸ்
கூறுகையில், "விருத்தாசலத்தில் 1 லட்சம் வேளாண் விளை பொருள் மூட்டைகள்
வைக்கும் வசதியுள்ளது. ஆனால் காய்கறிகள், பழங்கள், மல்லி, பருப்பு, மிளகாய்
உள்ளிட்டவைகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு வசதி இல்லை.
விவசாயிகள்
கோரிக்கையையேற்று, மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம் மார்க்கெட்
கமிட்டிகளில் தலா 33.9 லட்சம் ரூபாய் மதிப்பில் குளிர்சாதன கிடங்குகள்
அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதில், சீசன் காலங்களில் காய்கறி, பழங்களை
பாதுகாக்கவும், மற்ற நேரங்களில் தேவைப்படுவோர் கட்டண அடிப்படையில் புளி,
காய்கறி, பழங்கள், மிளகாய், மல்லி உள்ளிட்ட பொருட்களை வைத்து பயனடையலாம்.
இதில், 25 டன் வேளாண் விளை பொருட்களை வைப்பதற்கு தேவையான வசதிகள்
இருக்கும்' என தெரிவித்தார்.