சென்னை:மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மற்றும் நீதிமன்றங்கள் செயல்படும், சிங்கார வேலர் மாளிகையில், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசாருக்கு பாதுகாப்பு
இல்லாததுடன், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத சூழ்நிலை உள்ளது.
இதனால், அங்கு பணியாற்றும் பெண் காவலர்கள், அச்சத்துடனேயே பணியாற்றுகின்றனர்.
ராஜாஜி சாலையில் உள்ளது, சிங்கார வேலர் மாளிகை. இங்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள்
உள்ளிட்ட, பல்வேறு அரசுத்துறை
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. எட்டடுக்கு கொண்ட மாளிகையின் பாதுகாப்புக்காக, ஆயுதப்படை பிரிவில் உள்ள, 13 பெண் போலீசார், அங்கேயே தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், ஏழாவது மாடியில், நான்கு பெண் போலீசாரும், மூன்றாவது, இரண்டாவது மற்றும் முதல் மாடியில், தலா மூன்று பேர் வீதம், மொத்தம், 13 பேர், பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களுக்கான தங்கும் வசதிக்கான
ஏற்பாடுகள் படுமோசமாக உள்ளன.
குறிப்பாக, இரண்டாவது மாடியில், 15, 16, 17 மற்றும் 19வது மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் உள்ளன. இங்குள்ள கோப்புகளை பாதுகாக்கும் வகையில், மூன்று பேர் அங்கேயே தங்கி உள்ளனர்.
அவர்களுக்கான அடிப்படை வசதிகள், அங்கு, சுத்தமாக இல்லை. பலகைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும், கட்சி பேனர்களை கொண்டு திரை மறைவு ஏற்படுத்தியும் உள்ளனர்.
அந்த இடத்திலேயே தூங்கியும், ஆடைகளை மாற்றியும் பெண் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கை உபாதைகளுக்கு, இடத்தை தேடித் திரிய வேண்டியுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் எடுத்துரைத்தும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.