புதுச்சேரி:போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பாப்ஸ்கோ காஸ் ஏஜென்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிகப்பு நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, பாப்ஸ்கோ மூலம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 86 ஆயிரத்து 566 குடும்பத்தினருக்கு காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தட்டாஞ்சாவடி காமராஜர் சாலையிலுள்ள பாப்ஸ்கோ இண்டேன் காஸ் ஏஜென்சி மூலம் 37 ஆயிரம் பேர்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இணைப்புகள் தனியார் காஸ் ஏஜென்சியிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாப்ஸ்கோ காஸ் ஏஜென்சியில் இணைப்பு பெற்றவர்கள் புதுச்சேரியிலுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் காஸ் சிலிண்டரை பதிவு செய்யவும், காஸ் சிலிண்டர் பெறவும் வரவேண்டியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வரும் அலுவலகம், புதுச்சேரி - திண்டிவனம் சாலையிலுள்ள காமராஜர் சாலையையொட்டி இருப்பதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது.
நேற்று காலை வழக்கத்தை விட நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் பாப்ஸ்கோ காஸ் அலுவலகத்தில் குவிந்ததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. டி.நகர் போலீசார் , கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வரிசையில் நிற்க வைத்தனர்.
கூட்ட நெரிசல் குறித்து காஸ் ஏஜென்சி அதிகாரி கூறும்போது, "திருக்காஞ்சியில் காஸ் பில்லிங் செய்வதில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய முறையால் காஸ் சிலிண்டர்கள் சப்ளை தாமதமாகிறது. போதுமான சிலிண்டர் வராததால் வாகனங்கள் மூலம் டோர் டெலிவரி செய்யமுடியவில்லை' என்று தெரிவித்தார்.
பாப்ஸ்கோ காஸ் ஏஜென்சிக்கு எதிரில் தினந்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், வாகன போக்குவரத்திற்கு அடிக்கடி தடை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது இயங்கி வரும் அலுவலகத்தை யாருக்கும் இடையூறு இல்லாத இடத்தில் மாற்ற வேண்டும்.