வால்பாறை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், அடிக்கடி வனவிலங்குகள் இறப்பதால், இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களில் சமீபகாலமாக வனவிலங்குகள் அடிக்கடி பலியாகி வருகின்றன.
கடந்த இரண்டு மாதத்தில் அணலி எஸ்டேட், வில்லோனி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் இரண்டு யானைகளும், கருமலை எஸ்டேட் பகுதியில் ஒரு காட்டெருமையும் இறந்துள்ளன. நேற்றுமுன்தினம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட சவராங்காடு எஸ்டேட் பகுதியில் 9 மாத பெண் சிறுத்தை குட்டியும் இறந்தது.
இக்காப்பகத்தில் அடிக்கடி வனவிலங்குகள் பலியாகி வருவது, இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,"
யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டும், நோய்வாய்ப்பட்டும் தான் இறந்துள்ளன. அதே போல் சிங்கவால் குரங்கு வாகனத்தில் அடிபட்டும், மின் கம்பத்தில் அடிபட்டும் தான் இறந்துள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதிக்குள் நுழையும் யானைகளை தடுக்க கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.