வால்பாறை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தீ தடுப்பு மேலாண்மை மற்றும் புலிகள் மற்றும் இதர மாமிச உண்ணிகள் புகைப்படக்கருவி மூலம் கணக்கெடுத்தல் குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
அட்டகட்டியில் நடந்த பயிற்சி முகாமிற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மாவட்ட வன அலுவலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். வால்பாறை வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மும்மதுஅலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராஜீவ்கேஸ்ரீவத்ஷவா முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
கோடை வெயிலின் போது தீ விபத்து ஏற்படாமல் முன் கூட்டியே தடுக்க தீ தடுப்புக்கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வனத்துறை ஊழியர்கள் தீ தடுப்பு நடவடிக்கைபணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். கிராம பொதுமக்களிடையே நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக தனி "பீட்' அமைத்து, அதை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தீ விபத்து ஏற்படும் போது, உடனடியாக சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்து, தீயை மேலும் பராவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயை பரவ விட்டால் அது பெரிய விபத்துக்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. வனப்பகுதியில் முக்கியமான இடங்களில் கேமிரா பொருத்தி, புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி(டாப்சிலிப்) ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த பாரஸ்டர், கார்டு வாட்சர் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள் கலந்து கொண்டனர்.