பொள்ளாச்சி :பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெறுவதற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்கீடு செய்த 541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல் பல மாதங்களாக தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், பணிக்காலத்தின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும். இவர்களுக்கு, இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. கடந்த 1997ம் ஆண்டு வரை இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, வேலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 1998ம் ஆண்டுக்கு பின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த வரிசையில், இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் பேர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில், 541 பேருக்கு தற்போது பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் பணி நியமன உத்தரவு வழங்குவதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால், விழாவில் இவர்களுக்கு உத்தரவு வழங்கப்படவில்லை. தற்போது, வரை தேர்வு செய்த வாரிசுகளுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறையில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு "கவுன்சிலிங்' அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். "பணி ஒதுக்கீடு செய்த எங்களுக்கும், உடனடியாக பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும்,' என, இந்த வாரிசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது:
கருணை அடிப்படையில், அரசு பணி பெற பலரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனர். தற்போது, தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமன உத்தரவு பெறாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து பள்ளி கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கண்ணப்பன், ஆணையாளர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரசு பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும், இவர்கள் வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பல குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. முதல்வர் இப்பிரச்னையில் நேரில் தலையிட்டு, வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.