சென்னை:முக்கிய சாலைகளில் மழைநீர் கால்வாய் பணிகளை துவக்க, போக்குவரத்து போலீசாரின் ஒத்துழைப்பை மாநகராட்சி கோரியுள்ளது. மழைக்காலங்களில், சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதை தடுக்கும் வகையில், ஜவஹர் லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், 1,447 கோடி ரூபாயில், மழைநீர் கால்வாய் அமைத்தல், நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிகள், 2010ல், துவங்கப்பட்டன.
பொதுப்பணி துறை, 633 கோடி ரூபாயிலும், மாநகராட்சி, 814 கோடி ரூபாயிலும், பணிகளை துவக்கின. பணிகள், 2012ல், முடிந்திருக்க வேண்டும். இதுவரை, 40 சதவீத பணிகள் கூட முடியவில்லை.
இதுதொடர்பாக, ரிப்பன் மாளிகையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் கருணாசாகர், மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம்கபூர் மற்றும் அதிகாரிகளும் ஆலோசித்தனர்.
முக்கிய சாலைகளிலும், பள்ளம் தோண்டி மழைநீர் கால்வாய் பணிகளைத் துவங்க, முறையான அனுமதி, தடையில்லா சான்று தருவதோடு, தேவையான ஒத்துழைப்பு தருவதாக, கருணாசாகர் தெரிவித்தார்.
இதனால், பணிகள் துவங்காத சாலைகளில், உடனடியாக பணிகளை துவங்கவும், ஏற்கனவே தயாரித்துள்ள கான்கிரீட் சட்டங்கள் கொண்டு, கால்வாய்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.