சென்னை:""நம் முன்னோர்களின் வரலாற்றை அறியாதவர்கள், எதிர்காலத்தில், வரலாற்றை படைக்க முடியாது,'' என, கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அரசு செயலர், ஜவஹர், ஐ.ஏ.எஸ்., கூறினார்.
ஆர்வம் வேண்டும்
சென்னை, மீனாட்சி பெண்கள் கல்லூரியில், "தொல்லியல் துறையில் தற்கால நடைமுறை' என்ற தலைப்பில், இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
இவ்விழாவில் கல்லூரி செயலர், கே.எஸ்.லட்சுமி வரவேற்புரையாற்றினார். தொல்லியல் துறையின் ஆணையர், வசந்தி முன்னிலை வகித்தார்.
இதில், கலை மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் எஸ்.எஸ்.ஜவஹர் பேசியதாவது:
மாணவர்கள் மதிப்பெண்ணிற்காக மட்டுமே, பாடத்தை படிக்கக்கூடாது. கல்வி என்பது, வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதமல்ல; அது, நம் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைக்கக் கூடிய ஆயுதம்.
வரலாற்று பாடத்தை, வெறும் மனப்பாட பாடமாக படிக்க கூடாது, அதை உணர்ந்து படிக்கவேண்டும். மும்பை செல்வதற்கும், மும்பை என, எழுதிவிட்டு, அதன் மேல் உட்காருவதற்கான வேறுபாடு, வரலாற்றை உணர்ந்து படிப்பதற்கும், மனப்பாடம் செய்வதற்குமான வேறுபாடு ஆகும்.
இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள், வரலாற்றின் மீது ஆர்வம் செலுத்தவேண்டும். ஏனெனில், நம் முன்னோர்களின் வரலாற்றைப் படிக்காதவர்களால், வரலாறு படைக்கமுடியாது.
தொல்லியல் துறையின் மூலமாக கிடைக்கப்பெற்ற பல்வேறு பொருட்கள், நம் மூதாதையர்களின், கலை, பண்பாடு, நாகரிகம்ஆகியவற்றை விளக்குகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1905ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அதில், ஆதி காலத்தில் வாழ்ந்த மக்களின் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அதில் நாம் ஆர்வம் காட்டவில்லை.
கண்காட்சி
பின்னர், 100 ஆண்டு கழித்து நடத்தப்பட்ட அகழ்வின் மூலமாக, பல்வேறு தகவல்கள் தொல்லியல் துறைக்குக் கிடைத்தன.
இப்பொருட்கள் முன்பிருந்த வரலாற்றை, நாம் அறிந்துகொள்ள உதவியாக உள்ளன. எனவே, இளைய தலைமுறையினர், தொல்லியல் துறையில் ஆர்வம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், தமிழகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் பற்றிய, புகைப்படக் கண்காட்சி, துவங்கப்பட்டது.
மீனாட்சி மகளிர் கல்லூரியின், வரலாற்றுத் துறை, தலைவர் ருக்மணி வர்த்தனம் நன்றி உரையாற்றினார்.