சென்னை:வரதட்சணை கொடுமையால், இளம் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய போலீஸ்காரர், குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், கந்துகால் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோபி, 25; ஆவடி சிறப்பு காவல் படை பிரிவில், பணிபுரிந்து வருகிறார். இவர், தன் சொந்த ஊரை சேர்ந்த, சோனியா, 21, என்பவரை காதலித்து, கடந்தாண்டு, திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின், ஆவடி பகுதி காவலர் குடியிருப்பில், இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில், கோபி, வரதட்சணை கேட்டு, சோனியாவை துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இப்பிரச்னையில், கோபியின் குடும்பத்தை சேர்ந்தவர்களும், சோனியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த சோனியா, கடந்த அக்டோபரில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சண்முகம், விசாரணை நடத்தியதில், சோனியா தற்கொலைக்கு, கோபி, அவரது தாய் சாந்தி மற்றும் தம்பி கார்த்தி உள்ளிடோர் காரணம் என, தெரிந்தது. இதையடுத்து, திருமுல்லைவாயல் போலீசார், அவர்களை கைது செய்தனர்.