சென்னை:""முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவர் மகன் விஜயேந்தரா ஆகியோரால், என் உயிருக்கு ஆபத்து என்பதால், தமிழகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளேன்,'' என, கர்நாடக ஜனதா பரிக்ஷா கட்சியின் நிறுவனர் தலைவர் பிரசன்ன குமார் கூறினார்.
பா.ஜ.,விலிருந்து வெளியேறிய எடியூரப்பா, கர்நாட ஜனதா பரிக்ஷாவில் இணைந்தார். கட்சியை துவக்கிய பிரசன்ன குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓரங்கட்டிவிட்டு, கட்சியை தன் கட்டுப்பாட்டில், எடியூரப்பா கொண்டு வந்துவிட்டார் என, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், "எனக்கும், என் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. எந்த நேரத்திலும், எங்கள் உயிருக்கு ஆபத்து' எனக் கூறி, இரு தினங்களுக்கு முன், பெங்களூரிலிருந்து பிரசன்ன குமார், சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
கர்நாடக ஜனதா பரிக்ஷா என்ற கட்சியை துவக்கி, தேர்தல் ஆணையத்தில், 2011, ஏப்., 27ம் தேதி பதிவு செய்தேன். கட்சியின் தற்காலிக தலைவராக, முன்னாள் எம்.பி., தனஞ்ஜெயகுமாரை நியமித்தோம். பா.ஜ.,விலிருந்து விலகிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 2012, டிச., 9ம் தேதி, கர்நாடக ஜனதா பரிக்ஷாவில் இணைந்தார்.
அப்போது, எங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, கட்சி மற்றும் துணை அணி நிர்வாகிகளில், இரு தரப்பினரும் தலா, 50 சதவிகித நிர்வாகிகளை நியமிக்க, ஒப்புக் கொண்டோம். ஆனால், ஒப்பந்தப்படி எதையும், எடியூரப்பா ஏற்கவில்லை.
தன் கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வந்ததோடு, எங்களை ஓரம் கட்டிவிட்டார். இதனால் எடியூரப்பாவை, டிச., 20ம் தேதி, கட்சியிலிருந்து நீக்கினோம். இது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவித்துள்ளோம்.
இதை ஏற்றுக் கொள்ளாத எடியூரப்பா, அவர் மகன் விஜயேந்திரா, முன்னாள் தலைவர் தனஞ்ஜெயகுமார் ஆகியோர், எனக்கும், என் குடும்பத்தாருக்கும், கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். கர்நாடகாவில் இருந்தால், என் உயிருக்கு ஆபத்து என்பாதல், தமிழகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்து உள்ளேன்.
இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளேன். நான் மீண்டும் கர்நாடகா செல்ல, எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். எடியூரப்பாவிடமிருந்து என் கட்சியை மீட்க, அரசியல் உதவிகளை, தமிழகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, பிரசன்ன குமார் கூறினார்.
பேட்டியின் போது, "உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது' என, கதறி அழுதார். அவரது, ஆதரவாளர்கள் அவரை தேற்றினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.