திரிசூலம்:பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, லலிதா குமாரமங்கலம் ஆகியோர் பயணித்த திருச்சி விமானத்தில், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம், அவசரமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை, 10:50 மணிக்கு, 48 பயணிகளுடன் திருச்சி புறப்பட்டது. விமானத்தில், பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, லலிதா குமாரமங்கலம் ஆகியோர் இருந்தனர்.
அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவித்தார். விமானத்தை உடனடியாக, சென்னையில் தரையிறக்க, விமானிக்கு உத்தரவிடப்பட்டது.
அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டது. அந்த விமானம், பகல், 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும், ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். மதியம், 12:30 மணிக்கு, மாற்று விமானம் மூலம், பயணிகள் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர்.