நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் விவசாயிகள், கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து பயிரிட்டு வருகின்றனர். கரும்பு நடவு நட்டது முதல் வளர்ந்து நிழல் தரும் வரை அதிகளவு களை வளரும். களை எடுக்க அதிக ஆட்கள் தேவைப்படுவதால் செலவு அதிகமாகிறது. தொடர்ந்து உரங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிடுவதால் மகசூல் குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய தழைச்சத்து பயிர்களான சணப்பை தக்கப்பூண்டு பயிர்களை கரும்பு நடவு செய்தவுடன் விதைக்கலாம். 90 நாட்களில் இதை உழுவதன் மூலம் பயிருக்கு அதிக தழைச்சத்து கிடைக்கிறது. மேலும், இச்செடிகள் வளர்ந்து நிழல் தருவதால் கரும்பு பயிரில் பூச்சிகள் தாக்குவதில்லை. நிலமும் வளம் பெரும். மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் விவசாயிகள் கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து பயிரிட்டுள்ளனர். இதனால் களை கட்டுப்படுத்தப்படுகிறது. களை எடுக்கும் செலவும் குறைகிறது. உளுந்து பயிர் மூலம் வரும் வருமானம் கரும்பு பயிர் பராமரிப்புக்கும் உதவுகிறது. உளுந்து பயிரின் வேரில் இருக்கும் முடிச்சுகள் காற்றில் இருக்கும் நைட்ரஜனை கிரகித்து கரும்பு பயிருக்கு தருவதால் உரசெலவும் குறைகிறது.