விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் பனிப்பொழிவால் முந்திரி மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில், 89 ஆயிரத்து 500 ஏக்கரில் முந்திரி பயிர் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலில் 75 ஆயிரம் ஏக்கர் முந்திரி மரங்கள் சேதமடைந்தன. சாய்ந்த மரங்கள், முறிந்த கிளைகளை அகற்றிவிட்டு, எஞ்சியுள்ள முந்திரி மரங்களை பராமரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால் கடந்தாண்டு முந்திரி மகசூல் பாதித்தது. தற்போது முந்திரி மரங்கள் பூக்கத் துவங்கியுள்ளன. மாவட்டத்தில் இந்தாண்டு போதிய மழை பெய்யாததால் வறட்சி காரணமாக, பெரும்பாலான முந்திரி மரங்கள் துளிர் விடாமல், பூக்காமல் உள்ளன. இரண்டு வாரங்களாக கடும் பனி பொழிவு காரணமாக துளிர்விட்டு, பூத்துள்ள முந்திரி பூக்களும் கருகி, உதிர்ந்து வருகின்றன. இதனால் இந்தாண்டும் முந்திரி மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் வல்லுனர் அம்பேத்கர் கூறுகையில், "முந்திரியில் பூக்கும் பருவத்தில் தேயிலைக் கொசு தாக்குவதால் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து 60 முதல் 80 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும். இதனைத் கட்டுப்படுத்த தளிர்விடும் பருவத்தில் "புரப்பனோபாஸ் 50 இசி., மருந்தை லிட்டருக்கு 1.5 மி.லி., கலந்து தெளிக்க வேண்டும். முன்பாக, முந்திரி தோப்பு அருகிலுள்ள வேப்ப மரங்களில் தழைகளை கழித்து அப்புறப்படுத்தி, பின்னர் வேப்ப மரங்களுக்கும் சேர்த்து மருந்து தெளித்தால் நல்லது. மேலும், மா உள்ளிட்ட பிற மரங்களில் வாழும் "முசுடு' எனும் "செவ்வெறும்புகளை கூண்டோடு எடுத்து வந்து முந்திரி தோப்புகளில் பரவச் செய்தால், தேயிலைக் கொசுக்களை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். 25 நாட்களுக்குப் பின், பூக்கும் பருவத்தில் "குளோர்பைரிபாஸ்' லிட்டருக்கு 2.5 மி.லி., கலந்தும், பிஞ்சு விடும் பருவத்தில் "கார்பரி' மருந்தையும் லிட்டருக்கு 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். மேலும், துளிர் விடும் பருவத்திற்கு மருந்து தெளிக்கும்போது, அதனுடன் 2 கிராம் யூரியா கலந்து தெளித்தால், வறட்சியால் துளிர் விடாத மரங்கள், துளிர்த்து பூக்கத் துவங்கும்' என்றார்.