சிதம்பரம்: மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட அரசு செய்முறை பயிற்சி தேர்வு நடந்து வருகிறது. சிதம்பரம் நகர் பகுதியில் அரசு பெண்கள், நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள், ராமகிருஷ்ணா, பச்சையப்பா, ராமசாமி செட்டியார், அண்ணாமலை நகர் ராணி சீதையாச்சி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் என 11 பள்ளிகள் இயங்குகிறது. இதில் 3000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி தேர்வு கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 20 மதிப்பெண்கள் வகுப்பு ஆசிரியரால் மாணவர்களின் நன்நடத்தை மற்றும் செய்முறை பயிற்சி கையேடுக்கு மதிப்பெண் வழங்கப்படும். 30 மதிப்பெண்கள் புற தேர்வு ஆசிரியரால், செய்முறை பயிற்சி மூலம் வழங்கப்படும்.