போராட்டம்!நடவு செய்த பயிர்களை காப்பாற்ற விவசாயிகள்...
அதிக செலவில் இன்ஜின் வைத்து தண்ணீர் இறைப்பு
கிள்ளை: கதிர்வரும் நிலையில் உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கான்சாகிப் வாய்க்காலில் வரும் குறைந்தளவு தண்ணீரை, கூடுதல் செலவு செய்து, பல இடங்களில் நூற்றுக்கணக்கில் இன்ஜின்கள் வைத்து நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். தமிழகத்தில் பருவ மழை பொய்த்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததால் வீராணம், கொள்ளிடம் கீழ் அணையில் இருந்து பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். வீராணம் ஏரியை நம்பி பயிரிட்ட விவசாயிகளின் நெற்பயிர்கள் கருகியதால் மாடுகளை விட்டு மேய்த்தனர். கீழ் அணையில் கான்காகிப் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் கிள்ளை, தில்லை விடங்கன், கீழச்சாவடி, கிள்ளை, ராதாவிளாகம், பின்னத்தூர், நற்கரவந்தன்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். கான்சாகிப் வாய்க்காலில் வந்த தண்ணீரை நாற்றங்கால் மூலம் சில விவசாயிகள் நடவு செய்தனர். வாய்க்காலில் வந்த குறைந்தளவு தண்ணீரைக்கொண்டு நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து தற்போது நெற்பயிர்கள் கதிர் வரும் நிலையில் உள்ளது.
தண்ணீர் நிறுத்தம்
இந்நிலையில் கொள்ளிடம் கீழ் அணையில் இருந்து கான்சாகிப் வாய்க்காலுக்கு வந்த குறைந்தளவு தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் கடந்த 20 நாட்களாக கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நெற்பயிர்கள் காய்ந்து வந்தது. கதிர்வரும் நேரத்தில் நெற்பயிர்கள் காய்ந்து வந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். வாய்க்காலில் தண்ணீர் வரா ததை கண்டித்து கடந்த 26ம் தேதி மேலச் சாவடியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நெற்பயிர்கள் காய்ந்து வருவது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் கொள்ளிடம் கீழ் அணையில் கான்சாகிப் வாய்க்காலுக்கு குறைந்தளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் கான்சாகிப் வாய்க்காலில் இருந்து பாசனம் பெரும் வாய்க்காலான கீழத்து வாய்க்கால், தெற்கு வெளி வாய்க்கால், எலிசந்து வாய்க்கால், பள்ளி வாய்க்கால், பக்கிரி வாய்க்கால், பெரியமதகு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்காலில் குறைந்தளவு தண்ணீர் வந்தது.
@subtitle@இன்ஜின்@@subtitle@@
பாசன வாய்க்காலில் தண்ணீரை பார்த்தும் விவசாயிகள் சந்தோஷமடைந்து தங்களது இன்ஜின்களை கொண்டு சென்று வாய்க்காலில் இருந்து நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். வாய்க்காலில் இருந்து சிறிது தூரமுள்ள நெற்பயிர்களுக்கு டியூப் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
@subtitle@கூடுதல் செலவு
@@subtitle@@
இந்த வாய்க்கால்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்ஜின்கள் வைத்து, ஏக்கருக்கு சராசரியாக 1000 ரூபாய் செலவு செய்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர். கூடுதல் செலவு செய்தாலும் பரவாயில்லை. இதே போல் வாய்க்காலில் மேலும் 20 நாட்கள் தண்ணீர் வந்தால், கதிர் வரும் நிலையில் உள்ள நெற்பயிர்களை காப்பாற்றிவிடுவோம் என விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.