பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி இன்று நடைபெற இருந்த போராட்டம் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப் பட்டது. பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று 7ம் தேதி ஒரு நாள் அடையாள உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பத்மாவதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று (6ம் தேதி) நடந்தது. ஆதிதிராவிட நல தனி தாசில்தார் சரவணன், புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாணவர் சங்க மாவட்டச் செயலர் அரசன், பகத்சிங், அரிகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் உதயகுமார், ரவிசங்கர், சிவனேசன், தெய்வீக தாஸ் பங்கேற்றனர். கூட்டத்தில், பள்ளியின் அடிப்படை வசதி குறைபாடுகள், மாணவர்கள் சீருடை ஆகியவை குறித்து தனி தாசில்தார் மூலம் அரசுக்கு பரிந்துரைப்பது. காலியாக உள்ள பணியிடத்தை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மூலம் முன்மொழிவு அனுப்பி நடவடிக்கை எடுப்பது. பள்ளியின் முன்பு விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க வேகத்தடை ஏற்படுத்துவது. பள்ளி மாணவர்களிடம் எவ்வித தொகையும் வசூல் செய்யாமல் செலவுகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் செய்ய வேண்டியது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று 7ம் தேதி நடைபெற இருந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.