பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் போர் போட்டும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஊராட்சி திருத்துறையூர் செல்லும் சாலையில் அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை பொதுநிதி 2012-13ம் திட்டத்தின் கீழ் 1.60 லட்சம் ரூபாய் மதிப்பில் நீர்மின் விசை மோட்டார் கடந்த சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்த மோட்டாருக்கு மின் இணைப்பு பெற ஊராட்சி சார்பில் விண்ணப்பித்திருந்தனர். பக்கத்தில் உள்ள கூரை வீட்டின் மேல் மின் இணைப்பு செல்லும் என்பதால் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர். ஊராட்சி நிர்வாகமும் யாருக்கும் பாதிப்பில்லாமல் மின் இணைப்பு பெற தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிப்பது என்னவோ பொதுமக்கள் தான். இதற்கு ஒன்றிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தனி நபர்களுக்கு பாதிப்பில்லாமல் மின் இணைப்பு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.