பெண்ணாடம்: பழுதான மாளிகைக் கோட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் அடுத்த மாளிகைக் கோட்டம் கிராமத்தில், ஊராட்சி வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் கடந்த 1965ல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி கட்டப்பட்டு 47 ஆண்டுகளில், ஊராட்சி ஒன்றிய புனரமைப்பு திட்டத்தின் கீழ், 2002, 2008 ஆண்டுகளில் இருமுறை சீரமைக்கப்பட்டது. கடைசியாக புனரமைத்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போது வகுப்பறையின் மேல் தளம் பழுதடைந்து, சிமென்ட் காரை பெயர்ந்து விழுகின்றன. இதனால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் ஆபாயம் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளியை சீரமைக்க மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.