மதுரை: மதுரை மாவட்டத்தில், மின்தடையால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை, மின்சாரம் இருக்கும் நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள, கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.செய்முறை தேர்வு, பிப்.,4ல் துவங்கியது. பிப்.,18 வரை நடக்கிறது. மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில், 164 மையங்களில், 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். காலை 10 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை என, 2 "ஷிப்ட்'டாக தேர்வு நடக்கிறது.தேர்வு நடக்கும் பெரும்பாலான பகுதிகளில், காலை 10 முதல் 12 மணி வரைக்கும், மதியம் 3 மணி முதல் 6 மணி வரையும் மின்தடை உள்ளது. இதனால், இயற்பியல், கணினி, இ.எம்.ஆர்., பாடப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் ஆய்வக "பரிசோதனை'களை செய்யமுடியாமல் திண்டாடுகின்றனர். பல பள்ளிகளில் மதியம் 12 மணிக்கு மின்சாரம் சப்ளை வந்தவுடன், செய்முறை தேர்வை தொடர்கின்றனர். இதனால், 2வது "ஷிப்ட்' மாணவர்களுக்கு தேர்வு துவங்க தாமதம் ஏற்படுவதால், இரவு நேரத்திலும் தேர்வு தொடர்வதால், மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சந்திரன் கூறுகையில், ""மின்தடையால் செய்முறை தேர்வுகளை நடத்துவது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. தேர்வு மையங்கள் உள்ள பகுதிகளில், பிப்.,18 வரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்,'' என்றார்.முதன்மை கல்வி அதிகாரி அமுதவள்ளி கூறியதாவது:மாணவர்கள் நலன் கருதி தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று, தேர்வு துவங்குவதற்கு முன்பே, மின்வாரியத்திடம் அறிவுறுத்தியிருந்தோம். ஆனால், தொடரும் மின்தடையால் தேர்வுகள் பாதிக்கின்றன. இதற்காக, மின்சாரம் சப்ளை உள்ள நேரத்தில், செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். ஜெனரேட்டர்கள் "கப்சிப்'கடந்தாண்டு, அரசு பொதுத் தேர்வுகள் நடத்திய போது "மின்தடையை சமாளிக்க, தேர்வு மையங்களில், பள்ளிகளே "ஜெனரேட்டர்' ஏற்பாடு செய்துகொள்ளலாம். அதற்கான செலவை அரசே ஏற்கும்' என, அறிவிக்கப்பட்டது. இதனால், 90 சதவீதம் பள்ளிகளில் "ஜெனரேட்டர்கள்' ஏற்பாடு செய்து, அதற்கான டீசல் செலவை தலைமையாசிரியர்கள் ஏற்றனர். ஆனால், இதுவரை டீசல் செலவை தலைமையாசிரியர்களுக்கு வழங்கவில்லை. இந்நிலையில், பிப்.,1 முதல் செய்முறை தேர்வுகள் துவங்கிய நிலையில், "ஜெனரேட்டர்' பயன்படுத்துவது குறித்து இதுவரை தலைமையாசிரியர்களுக்கு எந்த உத்தரவும், பள்ளி கல்வித் துறை பிறப்பிக்காமல் "கப்சிப்' ஆக உள்ளது.