மதுரை: மதுரையில், தீ விபத்து அபாயம் உள்ள இடங்களில், தீயணைப்பு கருவிகள் வைப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.பிப்.,3ல், அரசு பாலிடெக்னிக் பாலத்தையொட்டி அமைந்துள்ள, பழைய இரும்பு மற்றும் மரக்கடை சந்தையில் தீப்பிடித்தது. இருபதுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தீ அணைக்கப்பட்டது. இதேபோல், தீ விபத்து அபாயத்துடன், தமிழ்ச் சங்கம் ரோட்டில், ஞாயிற்றுக்கிழமை சந்தை உள்ளது. இங்கு, தீயை அணைக்கும் கருவிகளோ, வசதியோ இல்லை. ஆழ்வார்புரம் மூங்கில் கடைகளும் இதேநிலையில்தான் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிப்.,4 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மேற்குறிப்பிட்ட இடங்களில், தீயணைப்பு கருவிகள் இருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.மாவட்ட தீயணைப்பு அதிகாரி கருப்பையா கூறுகையில், ""எங்கெல்லாம் தீ விபத்து அபாயம் உள்ள இடங்கள் உள்ளன என சர்வே எடுத்து வருகிறோம். அங்கு தீயணைப்பு கருவிகள் கட்டாயம் வைக்க வேண்டும் என தெரிவிக்க உள்ளோம்,'' என்றார்.