மதுரை: மதுரை நகரில், ஐந்து மாதங்களில், மூன்று போலீஸ் துணை கமிஷனர்கள் பணியிடங்கள் காலியாகி உள்ளன. இவர்களது பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் அதிகாரிகளுக்கு, கூடுதல் பணிச்சுமையால் நிர்வாக ரீதியாக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.ஆயுதப்படை துணைகமிஷனராக இருந்த காஜாமொய்தீன், கடந்த அக்டோபரில் ஓய்வு பெற்றார். இதுவரை அந்த பணியிடம் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை எஸ்.பி, யாக இருந்த பன்னீர்செல்வம், டிச.,3ல் போக்குவரத்து துணைகமிஷனராக பொறுப்பேற்றார். அவரும் டிச.,31ல் ஓய்வு பெற்றார்.இதற்கிடையே, கமிஷனர் அலுவலக நிர்வாக பணிகளை கவனிக்கும் துணைகமிஷனராக டிச.,10ல் செந்தில்குமார் பொறுப்பேற்றார். கடந்த மாதம், மாற்றுப் பணியாக சென்னையில் பணியாற்றினார். சில நாட்களுக்கு முன்தான், மதுரை திரும்பினார். இந்நிலையில், அவர் கிருஷ்ணகிரி எஸ்.பி.,யாக இடமாற்றப்பட்டார். காலியாக உள்ள மூன்று துணைகமிஷனர் பணியிடங்களை, துணைகமிஷனர்கள் திருநாவுக்கரசு(சட்டம் ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா(குற்றப்பிரிவு) கூடுதலாக கவனிக்க உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலையில், கூடுதல் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதால், நிர்வாக ரீதியாக பாதிப்பு ஏற்படும் என போலீசார் கருதுகின்றனர்.
இதை தவிர்க்க, காலி பணியிடங்களை உடனே நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.