மதுரை: ""வறட்சி காலத்தில் குறைந்தளவு தண்ணீரைக் கொண்டு, சிறுதானியங்களை பயிரிடலாம்,'' என, வேளாண்மை துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: சிறுதானியங்கள் எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும், மண் வகைகளிலும், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல்களை தாங்கி வளரக் கூடியது. சிறுதானியங்களில் அதிக தாதுப் பொருட்கள், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச் சத்துக்கள் அடங்கியுள்ளன.கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் அதிகம் உள்ளன. பெண்கள், வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் தன்மையுள்ளவை இத்தானியங்கள். அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இவற்றில் உள்ள "குளுட்டன்' சத்து எளிதில் செரிக்கக் கூடியது. அரிய சத்துக்களைக் கொண்ட சிறுதானியப் பயிர்களை, கிணறுகளில் உள்ள குறைந்தளவு தண்ணீர் கொண்டு சாகுபடி செய்து, நிறைய வருவாய் பெறலாம், என தெரிவித்துள்ளார்.