மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனைவி ராஜலட்சுமி,67,க்காக, தண்ணீரைத் தேடி வெளியே சென்ற சோழவந்தான் குப்புசாமி, 70, கோரிப்பாளையம் சிக்னல் அருகே விபத்தில் சிக்கி பலியானார்.மூன்று நாட்களாக மருத்துவமனையில் மாநகராட்சி குடிநீர் வினியோகம் இல்லாததால், நோயாளிகளும், உறவினர்களும் சிரமப்படுகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை, தண்ணீரைத் தேடி குப்புசாமி மற்றும் வார்டில் உள்ள பிற நோயாளிகளின் உறவினர்கள் 4 பேர், மருத்துவமனைக்கு வெளியே வந்தனர். ரோட்டை கடக்க முயன்ற போது, வாகனம் மோதி குப்புசாமி பலியானார். மருத்துவமனையில் குடிநீர் இல்லாததால், வெளியே சென்று முதியவர் விபத்தில் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உள்நோயாளிகளாக 2500 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், 2 இடங்களில் மட்டுமே குடிநீர் வசதி உள்ளது. மகப்பேறு வார்டு உட்பகுதியில் இருக்கும் குடிநீர் "பிளான்ட்' வெளியே தெரியாது. ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மூன்று நாட்களாக மாநகராட்சி தண்ணீர் வராததால், நோயாளிகளின்
உறவினர்கள் வீட்டில் இருந்து குடங்களில் தண்ணீரை எடுத்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தொடர்ந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதால்,
அங்கும் தண்ணீர் குறைவாக கிடைக்கிறது. அடுத்ததாக, கழிப்பறை பயன்பாட்டுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனை, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.