நாகமலைபுதுக்கோட்டை: மதுரை காமராஜ் பல்கலை மொழியியல் துறை, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் "தொல்காப்பிய மொழி விளக்க மரபுகளும், மொழியியலும்' என்ற தலைப்பில், 10 நாள் பயிலரங்கு நடக்கிறது.துவக்க விழாவில், துறைத் தலைவர் ரேணுகாதேவி வரவேற்றார். முன்னாள் தலைவர் முருகரத்தினம் தலைமை வகித்தார். ஒடிசா மாநில முதன்மைச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: முன்பு தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இருப்பதே நமக்கு தெரியாது. தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியம் முதலானது இல்லை. அதை படிக்கும் போது அதற்கு முன்பே ஏராளமான இலக்கணங்கள் இருந்திருக்க வேண்டும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள் குறித்து 1924ல் தான் அறிந்து கொண்டோம். அதன் பிறகு இந்திய வரலாறு முற்றிலும் மாறியது. இங்கு வாழ்ந்தவர்கள் யார், பேசிய மொழி என்ன, எங்கு புலம் பெயர்ந்தனர், என தெரியவில்லை. அதே போன்று இந்திய மரபில் இருந்து தமிழ் மரபு வேறுபடுகிறது. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற ஒரு பொது சமூக எண்ணத்தோடு கூடிய இந்த கோட்பாடு எப்படி தோன்றியது.மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் வாழந்தவர்கள் மற்றும் தமிழர்களின் உலக பொது பண்பாட்டு மரபு இரண்டும் ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள தொடர்பு குறித்து 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். விரைவில் விடை தெரியும், என்றார். தமிழியற்புல முன்னாள் தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பேசினர். உதவி பேராசிரியர்
முனியன் நன்றி கூறினார்.