மேலூர்: மதுரை மேலூரில் தாசில்தாரால் "சீல்' வைக்கப்பட்ட கிரானைட் குவாரிக்குள் அத்துமீறி நுழைந்து, 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள், மற்றும் லாரிகளை திருட முயன்றதாக, குவாரி
உரிமையாளர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலூர் திருவாதவூரில் பி.கே.செல்வராஜூக்கு சொந்தமான "சிந்து' கிரானைட் உள்ளது. அரசு இடங்களை ஆக்கிரமித்ததாகவும், அனுமதியின்றி "ஆபத்தான' நிலையில் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாசில்தார் வசந்தா ஜூலியட் முன்னிலையில் இந்நிறுவன அலுவலக கட்டடத்தை இடித்து, வெளி கேட்டில்"சீல்' வைக்கப்பட்டது.இந்நிலையில் பகலில் உள்ளே நுழைந்து, "சிந்து' கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் ஏழு பேர் சேர்ந்து, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்கள், டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள், இரு ஜெனரேட்டர்களை திருட முயன்றதாக திருவாதவூர் வி.ஏ.ஓ., அனுராதா, மேலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.