சூலூர்:"ஒவ்வொரு தொழிலிலும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி, கடுமையாக உழைத்தால், தொழில் முனைவோர்களை வெற்றி தேடி வரும்,' என, ஆஸ்திரேலிய பல்கலை பேராசிரியர் ஸ்டேன்லி ஜேம்ஸ் பேசினார்.
நீலம்பூர் ஜி.ஆர். தாமோதரன் மேலாண்மை கல்லூரியில், "இந்திய தொழில் முனைவோர்கள் மற்றும் மேலாளர்கள் தற்போது சந்திக்கும் பிரச்னைகளும், சவால்களும்- ஓர் உலகளாவிய பார்வை,' என்ற தலைப்பில், ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் கொற்றவேல்பாரதி வரவேற்றார்.
ஆஸ்திரேலியா, சிட்னி பல்கலை மேலாண்மைத்துறை பேராசிரியர் ஸ்டேன்லி ஜேம்ஸ் கருத்தரங்கு மலரை வெளியிட்டு பேசியதாவது:
மேலாண்மை கல்லூரி மாணவர்கள், நிகழ்கால பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். அதை, தொழில் முனைவதில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எதிர்காலத்தில் மேலாண்மை பணியில் சேர்ந்தாலும், தொழில் முனைவோராக உயர்ந்தாலும், தாங்கள் கற்றுக் கொண்ட ,மேலாண்மை தொழில்நுட்பங்களை அதில் புகுத்தி, கடுமையாக உழைத்தால், வெற்றி ஒவ்வொருவரையும் தேடி வரும். ஒவ்வொருவரும் சிறந்த தொழில் முனைவோராக சமுதாயத்தில் உயர வேண்டும், என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
புதுச்சேரி பல்கலை பேராசிரியர் அமிலன், மிசோராம் பல்கலை பேராசிரியர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த இரு அமர்வுகளில், மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பல கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில், ஒருங்கிணைப்பாளர் ரகுநாத ராகவன் வரவேற்றார். பாரதியார் பல்கலை மேலாண்மை துறை இயக்குனர் வேங்கடபதி சிறந்த கட்டுரைகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.