கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அடுத்த பதுவம்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு,"தோட்டக்கலையில் உயர் தொழில்நுட்பங்கள்' பயன்படுத்தும் முறைகள் குறித்து, இரண்டு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்ட நிதியின் மூலம் நடந்த பயிற்சியில், சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜாமணி பேசுகையில்,"தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, உயர் தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுத்தரப்
படும். நீர் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு, தேசிய நுண்ணீர் இயக்கம் மூலம், சொட்டு நீர் பாசனம் அமைக்க 75 மற்றும் 100 சதவீத மானியம் வழங்கப்படும். மண் பரிசோதனை செய்து, மண் வள அட்டை வழங்கப்படும்,' என்றார்.
விவசாயி நடராஜன் என்பவரது தோட்டத்தில் நடந்த வயல் இடைப்பயிற்சியில், உயர் மதிப்பு காய்கறி சாகுபடி, துல்லிய பண்ணை காய்கறி சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசனம், நோய் மேலாண்மை, அறுவடைக்குப்பின் மேலாண்மை, நோய் பராமரிப்பு குறித்து, வேளாண் பல்கலை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விளக்கினர்.
பழத்தோட்டத்தில் குழித்தட்டு நாற்றாங்கால் முறை, ஒட்டுக்கட்டும் முறை, பூச்சி மேலாண்மை அடர் நடவு முறை மற்றும் கவாத்து முறை குறித்து விளக்கப்பட்டது.