கண்ணகி நகர்:நேரு விளையாட்டு அரங்க விரிவாக்கத்துக்காக, அல்லிக்குளம் பகுதியில் இருந்து, கண்ணகி நகருக்கு இடமாற்றப்பட்ட குடும்பத்தினர், தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.சென்னை நேரு விளையாட்டு அரங்க விரிவாக்க பணிகளுக்காக, அல்லிக்குளம் திடீர் நகர் மற்றும் கண்ணப்பர் திடல் பகுதிகளில் வசித்து வந்த 270 குடும்பங்கள், 15 நாட்களுக்கு முன், கண்ணகி நகருக்கு மாற்றப்பட்டனர்.
இதனால், இந்த குடும்பங்களை சேர்ந்த, 120 மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல், திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துஇதுகுறித்து, பெற்றோர் சிலர் கூறுகையில், "எங்கள் குழந்தைகள் சூளை, கன்னிகாபுரம், பூக்கடை பகுதி பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்போது, சிறு வயது குழந்தைகளை எப்படி, 16 கி.மீ., தூரம் உள்ள பள்ளிகளுக்கு, அனுப்ப முடியும். இரண்டு பஸ் மாறி செல்லவேண்டி உள்ளதால், குழந்தைகள், இப்@பாது பள்ளி செல்வதில்லை' என்றனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோரில் ஒருவரான செல்வி கூறுகையில், ""சூளையில் 8ம் வகுப்பு படிக்கும் என் மகள், காலை 6:00 மணிக்கு கிளம்பி, இரவு 8:30 மணிக்கு தான் வருகிறாள். தினமும் 35 கி.மீ., பயணிக்கிறாள். கல்வி முக்கியம் என, அனுப்புகிறோம். சிரமங்களுக்கிடையே, இறுதித் தேர்வுக்கு எப்படி படிப்பாள் என, தெரியவில்லை,'' என்றார்.
சேர்க்க தயக்கம்:இதுகுறித்து, மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இடம் மாற்றப்பட்ட குடும்பத்தில் உள்ள, 120 மாணவர்களில், 74 பேர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டு, படிப்பைத் தொடர வழி செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ளோர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பதால், ஏற்கனவே படித்த பள்ளிக்கே வந்து செல்கின்றனர்,'' என்றார்.மேலும், ""கண்ணகி நகரில் இருந்து வர, இலவச, பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. சிலருக்கு, பாஸ் தரப்பட்டுவிட்டது. மற்றவர்களுக்கும், ஓரிரு நாளில் கிடைத்துவிடும். இடமாற்றத்தால் சிரமம் என்றாலும், கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
அதிகாரி இவ்வாறு உறுதி அளித்தாலும், கண்ணகி நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளதால், மேற்கொண்டு மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.அரையாண்டு தேர்வுகள் முடிந்து, வரும், ஏப்ரலில், முழு ஆண்டு தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், மாணவர்களை சேர்த்தால், அவர்களை தயார்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்றும், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இலவச பஸ் பாஸ் கொடுத்தால் மட்டும் மாணவர்களின் பிரச்னை தீர்ந்து விடாது என்பது, பெற்றோரின் கருத்து. குறிப்பாக, மாணவியரின் நலன் கருதி, அந்த குடும்பங்களுக்கு, மாநகராட்சி கல்வி துறை மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும். அப்படி செய்யாவிட்டால், சில மாணவியர், படிப்பை நிறுத்தும் அவல நிலைக்கு தள்ளப்படுவர்.
"வீட்டை திருப்பி கொடுப்போம்':இடமாற்றம் காரணமாக, பெரும்பாலான குடும்பத்தினர், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். கண்ணகி நகரில் உள்ள பிரச்னைகள் அவர்களை @மலும் அதிருப்தி அடைய öŒ#துள்ளது.இதுகுறித்து, வேளாங்கன்னி கூறுகையில், ""நான் கூடை முடையும் வேலை செய்கிறேன். அங்கேயே மூங்கில் வாங்கி, பின்னி கொடுப்பேன். கண்ணகி நகருக்கு வந்த பின், என்ன செய்வது என, தெரியவில்லை,'' என்றார்.
லூயிஸ் கூறுகையில், ""அம்பத்தூருக்கு அனுப்புவதாக கூறி, இங்கு விட்டு விட்டனர். நானும், மனைவியும் கூலி வேலை செய்கிறோம். ஒருவருக்கு தான், பஸ் பாஸ் தந்துள்ளனர். இங்கு வந்ததும், 1,320 ரூபாய் முன்பணம் கட்டச் சொல்கின்றனர். அவ்வளவு பணம் இல்லாததால், வீட்டை திருப்பிக் கொடுத்துவிட்டு, பழைய இடத்திற்கே திரும்ப உள்ளோம்,'' என்றார்.
செல்வராணி கூறுகையில், ""எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றடுக்கு பகுதியில், கடந்த, நான்கு நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், வீட்டிற்கு எதிரிலேயே, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குழந்தைகள், அதிலேயே விளையாடுகின்றனர். சாலைகளும் படுமோசமாக உள்ளன. பேருந்து வசதியும் போதுமானதாக இல்லை,'' என்றார்.