சென்னை:நெம்மேலி கடல் நீரை குடி நீராக்கும் திட்டப் பணிகளில், 98 சதவீதம் முடிந்து, சோதனை ஓட்டம் துவங்கி உள்ளது. மொத்த பணிகளும், இம்மாதம் முடிந்து, விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பதால், சென்னை மக்களின் தேவை, பெருமளவு பூர்த்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மீஞ்சூரில், தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் பெறும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
2010ல் துவக்கம்:அதுபோல், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, மாமல்லபுரத்தை அடுத்த, நெம்மேலியில், தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் பெறும் வகையில், 908.28 கோடி ரூபாயில், கடல்நீரை, குடிநீராக்கும் திட்டப்பணிகள், 2010ல் துவங்கின.இவை, 2011, டிசம்பரில் முடிந்திருக்க வேண்டும். கடல் சார்ந்த பகுதிகளில், குழாய் பதிப்பதில் தாமதம் ஆனது. பின், பணிகள் முடுக்கிவிடப்பட்டு, தற்போது, முடியும் தறுவாயில் உள்ளன.
இது குறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:நெம்மேலி கடல் நீரை, குடிநீராக்கும் திட்டப்பணிகள், 98 சதவீதம் முடிந்து, சோதனை ஓட்டம் நடக்கிறது. குடிநீரை கொண்டு செல்ல, 64.37 கி.மீ., நீளத்திற்கு, குழாய்கள் பதிக்கும் பணி முடிந்துள்ளது. திருவான்மியூர், வேளச்சேரி, அக்கரை மற்றும் நெம்மேலியில், நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள், கடல் சார்ந்த குழாய் பதிக்கும், பணிகளும் முடிந்துவிட்டன.
குடிநீர் தட்டுப்பாடு குறையும்:பிரதான குடிநீர் குழாய்கள், கீழ்நிலை தொட்டிகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட, அனைத்து பணிகளும், இந்த மாதத்திற்குள் முடியும்.எப்போது, திறப்பது என்பதை, அரசு முடிவு செய்யும். முதல் கட்டமாக, ஆறு முதல், ஏழு கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படும். பின், படிப்படியாக, 10 கோடி லிட்டர் பெறப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நெம்மேலி குடிநீர் திட்டம் விரைவில் முடியும் என, அமைச்சர் முனுசாமி, சட்டசபையில், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். நெம்மேலியில் இருந்து தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் பட்சத்தில், மக்களின் குடிநீர் தேவை, பெருமளவு பூர்த்தியாவதோடு, கோடையில், குடிநீர் தட்டுப்பாடு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சோழிங்கநல்லூருக்கு குடிநீர் கிடைக்குமா?:நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தாலும், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், இன்னும் துவங்கவே இல்லை.மேலும், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தேக்க தொட்டிகள் அமைக்கும் திட்டம், இரண்டு ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது.இதனால், நெம்மேலி கடல் நீரை, குடிநீராக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தாலும், மேற்கண்ட பகுதிகளில், குடிநீர் வினியோகம் இருக்க வாய்ப்பு இல்லை.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""படிப்படியாக, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளது,'' என, கூறியதுடன், முடித்து கொண்டார்.