சென்னை:வியாசர்பாடியில், வாலி பரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில், மூவர் சரண் அடைந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரித்ததில், கொலையில் தொடர்புடைய மேலும் இருவர், நேற்று கைது செய்யப்பட்டனர்.எம்.கே.பி.நகர், 10வது தெருவை சேர்ந்தவர் டைசன் என்ற பிரவீன்குமாருக்கும், வியாசர்பாடியை சேர்ந்த வினோத்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது. தவிர, இருவரும் ஒரே பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில், பிரவீன்குமாரை, வினோத்குமார் மற்றும் நண்பர்கள், வியாசர்பாடி ரயில்வே மைதானத்தில் கொடூரமாக கொலை செய்தனர்.இது தொடர்பாக, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த வினோத்குமார், தேபர்நகரை சேர்ந்த கலைவாணன் மற்றும் அஜீத் ஆகிய மூவர், சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.விசாரணையில், கொலைக்கு உடந்தையாக இருந்த, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த, சரவணன் மற்றும் "குள்ள' பிரசாத் உள்ளிட்ட மேலும் இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.