சென்னை:பழுது பணிகளுக்காக, தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றி, தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்காததால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.திரு.வி.க நகர் மண்டலத்தில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 68, 69, 72 உள்ளிட்ட வார்டுகளில், குடிநீர் இணைப்பு, கழிவுநீர், மின்சாரம் போன்ற பல்வேறு பணிகளுக்காக, சாலையில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளை சுற்றி, தடுப்பு அமைக்காததால், விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மெத்தனம்:அரசு துறைகள் பணிகளை செய்யும் போது, பாதுகாப்புக்காக உரிய தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் இதை வலியுறுத்தினார்.இதை, சில வாரங்கள் கடைபிடித்த வாரியங்கள், தற்போது மீண்டும் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றன.திரு.வி.க., நகர் 68 வது வார்டில், ஜெய்பீம் நகர், திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களிலும் கழிவுநீர் வடிகால்வாய் பணிகளுக்காகவும், 69வது வார்டில், பேப்பர் மில்ஸ் சாலை, ராகவா தெரு, மடம் தெரு, பள்ளிச் சாலை உள்ளிட்ட இடங்களிலும், மின் வாரிய கேபிள் பதிக்கவும் குடிநீர் இணைப்புக்காகவும், 72 வது வார்டில், அம்பேத்கார் சாலை, டிக்காஸ்டர் சாலை, வ.உ.சி நகர் ஆகிய இடங்களில் கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கவும், பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.
மழைநீர்:காலையில் மட்டுமே இங்கு பணிகள் நடக்கின்றன. மற்ற நேரங்களில் தடுப்பு இல்லாததால், மண் சருக்கி, தெருக்களில் செல்வோர் பள்ளங்களில் விழுந்து, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது, சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், இந்த பள்ளங்களில் மழைநீர் நிரம்பி உள்ளது. உரிய தடுப்பு அமைப்பு இல்லாததால், பெரம்பூர், மடம் தெருவில் இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுகின்றன.பொதுமக்கள் இதை கவனித்ததால், வாகனத்துடன் விழுந்தவரை மீட்டனர். இதுபோல், இரவு நேரங்களில், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களில், தடுப்பு அமைப்புடன் எச்சரிக்கை பலகையும் வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.