சென்னை:சாக்கடை கழிவுநீரால், ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில், சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.ராயபுரம் கிரேஸ் கார்டன், மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட, குறுக்கு சந்துகளில், குடியிருப்புகளை தவிர, தனியார் பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களில் இருந்து, வெளியேறும் கழிவுகள், சாக்கடையில் விடப்படுகின்றன.இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும், சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
இந்த அடைப்பால், சாலையில் உள்ள சாக்கடை தொட்டிகள் நிரம்பி, சாலை முழுவதும், சாக்கடை ஆறாக ஓடுகிறது. இப்பிரச்னை, கடந்த ஓராண்டாக தொடர்கிறது. பல வீடுகளில், சாக்கடை வெளியேறாமல், தேங்கி உள்ளது.இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் ரமணி கூறுகையில், ""இப்பகுதியில் வசிப்பவர்கள், நோய்தொற்றுக்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவித்தால், 15 நாட்களுக்கு ஒருமுறை, அடைப்பை சரி செய்கின்றனர். அவர்கள் சென்றதும், மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.