திருப்பூர்: "ஹைடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா' சார்பில், 12வது நிட்-டெக் கண்காட்சி, திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள கண்காட்சி வளாகத்தில் நாளை துவங்குகிறது; வரும் 25ம் தேதி வரை நாட்கு நாட்கள் கண்காட்சி நடைபெறும். 20 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அரங்கு அமைக்கும் பணி படுமும்முரமாக நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும், நவீன ரக இயந்திரங்கள் தருவிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.
நிட்-டெக் கண்காட்சி மற்றும் ஏற்பாடு குறித்து, அதன் தலைவர் ராயப்பன் கூறியதாவது:
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் நாளை துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியில், அமெரிக்கா, ஜெர்மன், இத்தாலி, ஆஸ்டிரியா, துருக்கி, செக்கோஸ்லோவாகியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த முன்னணி பின்னலாடை இயந்திர தயாரிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
உள்நாட்டளவில், மும்பை, டில்லி, சூரத், லூதியானா, ஆமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் இருந்தும், பின்னலாடை உற்பத்தி செய்யும் நவீன இயந்திரங்களும், அதன் துணை இயந்திரங்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. பின்னலாடை உற்பத்தியின் முதுகெலும்பான "நிட்டிங்'கில் துவங்கி, "டையிங்', "காம்பாக்டிங்', "பிரின்டிங்', "எம்ப்ராய்டரி', "சூயிங்', "லே-கட்டிங்' வரை அனைத்து விதமான நவீன இயந்திரங்கள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.
மொத்தம் 400 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 ஆயிரம் பேர் வரை கண்காட்சியை கண்டுகளிப்பர் என எதிர்பார்க்கிறோம். தினமும் காலை 10.00 முதல் மாலை 6.30 மணி கண்காட்சி நடைபெறும். வரும் 23ம் தேதி நிப்ட்-டீ கல்லூரி சார்பில், "பேஷன் பெஸ்ட்' என்ற பேஷன் ஷோ நடக்கிறது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறை மேம்பாட்டுக்கு உதவும் வகையில், "நிட்-டெக்' கண்காட்சி அமையும் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.