திருப்பூர்: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க, கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பகங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ல் துவங்கி 27 வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 27ல் துவங்கி ஏப்., 12 வரை நடக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், 9,964 மாணவர்கள்; 12 ஆயிரத்து 46 மாணவியர், தனித்தேர்வராக 960 பேர் என 22 ஆயிரத்து 970 பேர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 11 ஆயிரத்து 46 மாணவர்கள்; 11 ஆயிரத்து 852 மாணவியர் என 22 ஆயிரத்து 898 பேர், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3,427 மாணவர்கள்; 3,652 மாணவியர், தனித்தேர்வர்கள் 1,300 என 31 ஆயிரத்து 277 பேர் தேர்வு எழுதுகின்றனர்.ஏழு இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரட்டை பூட்டு முறையில், இரு காப்பாளர்கள் வீதம் 14 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காப்பகங்களுக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்விற்கு, முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 97 தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 97 ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களாக 1,146 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க, முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 76 தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 152 ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களாக 1,570 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. மீறினால் போலீசார் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். சில மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை குறித்து தேர்வு மையங்களில் சுவரொட்டி ஒட்டப்படும்.தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க, கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்படும். பறக்கும் படையினர் எந்நேரத்திலும் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வர். பிளஸ் 2 தேர்வுக்காக, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக, 152 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்படும், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.