மதுரை: மாநகராட்சியில் குடிநீர் பெறுவது, குதிரை கொம்பாக மாறிவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும், அதற்கு ஏற்றார் போல் பிரச்னை வருகிறது. சில மாதங்களுக்கு முன் நீடித்த கடும் மின்வெட்டால், பம்பிங் பணிகள் பாதிக்கப்பட்டன.இதனால், குடிநீரில் சாக்கடை கலந்தது. அனைத்து மண்டலங்களிலும் வேரூன்றிய இப்பிரச்னை, சமீபமாக குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, மீண்டும் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில், குடிநீரை மக்கள் பயன்படுத்த முடியாமல், வீதியில் ஊற்றினர். சித்திரைக்காரத் தெருவில் வந்த நீரை வீணாக்க மனமில்லாத மக்கள், குடங்களில் பிடித்து புழக்கத்திற்கு பயன்படுத்தினர். மதுரையில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நிச்சயம் இம்முறை பழி, மழை மீது தான் விழப்போகிறது. தொழில்நுட்ப கோளாறு என்பதால், அதிகாரிகள் கூறும் குறையை தான் கேட்கவேண்டியுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சில இடங்களில் மழைநீர் தேங்கி, சேதமடைந்த குழாய்களில் கலந்திருக்கலாம். தொட்டிகளில் நீர் தேக்கி பிடிப்பதாலும், இப்பிரச்னை வர வாய்ப்புள்ளது,' என்றார். மழைநீர் வடிகால் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம் முழுமை பெறாத வரைக்கும், குடிநீரில்தான் சாக்கடை வெளியேறும்.