மக்களிடம் ஆதரவு இல்லாதது, கண்காணிப்பு குழு எதிர்ப்பு ஆகிய காரணங்களால், சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.,) விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
விதிமீறல் கட்டடங்கள் வழக்கை விசாரித்து வரும் சென்னை ஐகோர்ட், 2006ல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, 12 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது.
நீதிபதி மோகன் குழு பரிந்துரை அடிப்படையில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை, ஐகோர்ட் அனுமதியின்றி துவங்குவதற்கு, கடந்த நவம்பர் மாதம் நடந்த கண்காணிப்புக்குழு
கூட்டத்திலேயே எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை டிசம்பர் இறுதி வாரத்தில் துவக்கினர். கண்காணிப்பு குழுவில் 12 பேர் உள்ளனர்.
இதில், அரசு அதிகாரிகள் எட்டுபேர்; அரசு அலுவல் சாராமல் துறையில்
நிபுணத்துவம் பெற்றவர்கள் நான்கு பேர்.
எதிர்ப்பு
கண்காணிப்புக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களில் ஒருவரான தேவசகாயம், ""முந்தைய கூட்டத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பை மீறி, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடந்துக்கொள்வதால், 48வது கூட்டம் நடத்துவதில் எவ்வித பலனும் இல்லை,'' என்று குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., துணை தலைவருக்கு, கடிதம் அனுப்பினார். கூட்டத்துக்கு வருவதையும் அவர் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம்,
4ம் தேதி நடந்த கண்காணிப்புக்குழு
கூட்டத்தில் பங்கேற்ற மற்ற அலுவல் சாரா உறுப்பினர்களும், தேவசகாயத்தின் கருத்தை வழிமொழிந்து, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினர்.
கூட்டம் முடிந்த பின், அதன் நிகழ்வு குறிப்பேட்டில் (மினிட்ஸ்) அலுவல் சாரா உறுப்பினர்களின் எதிர்ப்பு குறித்து, மேம்போக்காக சில வரிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை திட்டத்தை நியாயப்படுத்துவது போன்ற சி.எம்.டி.ஏ., தரப்பு கருத்து மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு, கண்காணிப்புக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர்களில் சிலர், தங்களது எதிர்ப்பை சி.எம்.டி.ஏ., துணை தலைவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தின் நிகழ்வு குறிப்பேட்டை திருத்த முடிவு செய்யப்பட்டது.
திருத்தம்
இதன்படி, திருத்தப்பட்ட கூட்ட நிகழ்வு குறிப்பேடு, சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை திட்டத்தை செயல்படுத்த அலுவல் சாரா உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பு பதிவு செய்யப்படுகிறது.
ஐகோர்ட் அனுமதி வழங்கிய, 1999ம் ஆண்டுக்கான வரன்முறை திட்டத்தை பாதிக்காத வகையில், தற்போதைய வரன்முறை திட்டம் செயல்படுத்தப்படும். அத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரன்முறை திட்டம்
பொருந்தாது.
கண்ணை மூடிக்கொண்டு, எல்லா விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த மாட்டோம். நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ள வரைமுறைகளுக்கு உட்பட்டே, விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை செய்யப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடரும் சிக்கல்
கடந்த, 2007 ஜூலைக்கு முன், கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை, வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் தகுதி பெற குறிப்பிடப்பட்டுள்ள, நான்கு நிபந்தனைகள் ஒரு சேர பொருந்தாதது, தற்போதைய வழிகாட்டி மதிப்பில் வரன்முறைக்கு அதிக தொகை செலுத்த வேண்டியிருப்பது போன்ற காரணங்களால், இதில் விண்ணப்பிக்க பொது மக்கள் தயங்குகின்றனர்.
இந்நிலையில், கண்காணிப்புக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களின் எதிர்ப்பு வலுத்து வருவதால், வரன்முறை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற சந்தேகம், எழுந்து உள்ளது.
- நமது நிருபர் -