சென்னை:நெம்மேலியில், 908 கோடி ரூபாயில் நிறுவப்பட்டுள்ள, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில், உற்பத்தி இன்று துவங்குகிறது. தினமும் கிடைக்கும், 10 கோடி லிட்டர் குடிநீர், தென்சென்னை பகுதியில் வினியோகிக்கப்படும் என்று, குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, தினமும், 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை. 2021ம் ஆண்டில், 1980
மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
ரூ.908 கோடி
தென் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, மாமல்லபுரத்தை அடுத்த, நெம்மேலியில், தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் பெறும் வகையில், 908.28 கோடி ரூபாயில், கடல்நீரை, குடிநீராக்கும்
திட்டப்பணிகள், 2010ல் துவங்கின.
இவை, 2011, டிசம்பரில் முடிந்திருக்க வேண்டும். கடல் சார்ந்த பகுதிகளில், குழாய் பதிப்பதில் தாமதம் ஆனது. தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டு, ஒட்டுமொத்தப் பணிகளும் தற்போது, நிறைவடைந்துள்ளன. குடிநீர் வினியோகத்திற்காக, திருவான்மியூர், வேளச்சேரி, அக்கரை மற்றும் நெம்மேலியில், நீரேற்று நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன.
நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை 10:00 மணிக்கு, திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, 7 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படும். படிப்படியாக, ஒரு மாதத்திற்குள், 10 கோடி லிட்டர் பெறப்படும் என, சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த பகுதிகள்..?
இந்த தொழிற்சாலை மூலம் கிடைக்கும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான, திருவான்மியூர், வேளச்சேரி, கேளம்பாக்கம், பள்ளிப்பட்டு, ஐ.டி., காரிடார், சோழிங்கநல்லூரின் ஒரு பகுதிகளுக்கும் வினியோகிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதிகளுக்கும் வினியோகிக்கப்படும் என, தெரிகிறது.