சென்னை:குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், தொழில்நுட்ப ரீதியிலான விவரங்களைச் சமர்ப்பிக்க, இன்று, இறுதி நாளாக, மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையில், குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், குப்பையில் இருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும், குப்பை மாற்று தொழிற்சாலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆர்வம் காட்டிய பன்னாட்டு நிறுவனங்களில், 16 நிறுவனங்கள், ஒப்பந்தத்தில் பங்கேற்க, தகுதி வாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்டன.
இதற்கான திட்ட வரைவும் தயார் நிலையில் உள்ளது. திட்டத்தை செயல்படுத்த, அரசு, நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளதால், ஒப்பந்தம் கோர மாநகராட்சி முயற்சித்து வருகிறது.
திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள், ஆலோசனை தரும் நிறுவனங்களிடமும் ஆலோசித்து வருகிறது. நேற்று முன்தினம், சிட்டி கனெக்ட், சி.டி.ஐ.ஏ., நிறுவனங்களுடன், ஆணையர் விக்ரம் கபூர் ஆலோசனை நடத்தினார். இன்னும், பல நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், திட்டத்தை செயல்படுத்த தேர்வான நிறுவனங்கள், தங்களின், தொழில்நுட்ப ரீதியிலான ஆவணங்களை, பிப்., 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவித்திருந்தது. நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று, இந்த அவகாசத்தை, பிப்., 22ம் தேதி வரை மாநகராட்சி நீட்டித்தது. இதன்படி, இந்நிறுவனங்கள், இன்றுக்குள் தங்களின் தொழில்நுட்ப விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து, திடக்கழிவு மேலாண்மை பிரிவு அதிகாரி கூறியதாவது:
தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் தொழில்நுட்பங்கள் பரிசீலிக்கப்படும். பல்வேறு ஆலோசனை நிறுவனங்கள், நிபுணர்களின் கருத்துக்களும் ஏற்கப்பட்டு, தேவைப்பட்டால், திட்ட வரைவில் சில திருத்தங்கள் செய்து, விரைவில் ஒப்பம் கோரப்படும். திட்டத்தில், எந்த குளறுபடிகளும் வராத வகையில் செயல்படுத்த, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்
கூறினார்.