சென்னை:வீடு மற்றும் கடைகளில், 13 சவரன் நகை, 1.32 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
புரசைவாக்கம், சுந்தரம்பிள்ளை தெருவை சேர்ந்தவர், சத்திய சீலன், 58. இவரின் மனைவி கலைவாணி, 50. நேற்று முன்தினம் இரவு, மெரீனா கடற்கரையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்துக்கு, குடும்பத்தோடு சென்றனர்.
நேற்று காலை வீடு திரும்பிய இவர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 13 சவரன் நகைகள் காணவில்லை.
புகாரின்படி, வேப்பேரி போலீசார், மர்ம நபர்களை தேடுகின்றனர்.
இதேபோல், பெரியமேடு சைடன் ஹார்ம்ஸ் சாலையில், டெக்கரேஷன் சென்டர் வைத்திருப்பவர் கமலேஷ் குமார், 40. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை, கடையை திறக்க வந்தவர், பக்கவாட்டு ஜன்னல் திறந்து கிடப்பதை பார்த்தார். உள்ளே இருந்த பணப் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த, 1.32 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது.
புகாரின்படி, பெரியமேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.