சென்னை:வியாபாரிகளிடம், நடுரோட்டில் நகை மற்றும் பணத்தை, கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
பண்ருட்டியை சேர்ந்தவர் வைரக்கண்ணு,62. இவரது மகன் அருண்,35. இவர்கள் பண்ருட்டியில் நகை கடை வைத்துள்ளனர்.
கடைக்கு தேவையான நகைகளை பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள மொத்த விலை நகைக்கடைகளில் வாங்கிச் செல்வது வழக்கம். அதே போல், பழைய நகைகளை கொடுத்து, மாற்றாக புதிய நகைகளையும் வாங்கிச் செல்வர். நேற்று முன்தினம் மாலை நகை வாங்க தந்தையும், மகனும் வந்திருந்தனர்.
நாராயண முதலி தெருவில், 35 சவரன் பழைய நகை மற்றும் 2 லட்சம்
ரூபாய் பணம் அடங்கிய, இரண்டு பைகளுடன் நின்றிருந்தனர்.
அப்போது, சைக்கிள் ரிக்ஷாவில் வந்த சிலர், எங்கே சவாரி செல்ல வேண்டும்
எனகேட்டனர். ஒருவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, மற்றொருவன், கத்திமுனையில் மிரட்டி, அவர்கள் வைத்திருந்த இரண்டு பைகளையும் பறித்துச் சென்றான்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பாரிமுனையில் நடந்த, இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூக்கடை போலீசில் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டு உள்ளது.
நகைகடைகள் அதிகம் உள்ள பாரிமுனையில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
ஆனால், இதை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. நகை வியாபாரிகளிடம் தற்போது நடந்துள்ள துணிகர கொள்ளை, கேமரா வைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திஉள்ளது.