சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், தமிழக அமைச்சர், அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, ஒரு, வார இதழில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரையின் அடிப்படையில், தி.மு.க., பத்திரிகையான, "முரசொலி'யில், கருணாநிதியின் கேள்வி - பதில் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து, கருணாநிதி, பத்திரிகை ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது, அவதூறு வழக்குகளை, அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.
தற்போது, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் சார்பில், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
கருணாநிதி மற்றும் செல்வத்துக்கு எதிராக, இவ்வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மனுவில், "பத்திரிகையில் வெளியான செய்தியில், எந்த அடிப்படையும் இல்லை; அவதூறு செய்யும் நோக்கில், செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, சட்டப்படி, கருணாநிதி மற்றும் செல்வம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சிவபதி, பச்சைமால் உள்ளிட்ட அமைச்சர்கள், கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.