கிருமாம்பாக்கம்:கபடிப் போட்டி பரிசளிப்பு விழா, அபிஷேகப்பாக்கத்தில் நடந்தது.
புதுச்சேரி மாநில கபடி சங்கம் மற்றும் யங் பிளட் விளையாட்டுக் கழகம் சார்பில், கமலக்கண்ணன் நினைவுக் கோப்பைக்கான கபடி போட்டி, சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது. புதுச்சேரி ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் செல்வம், போட்டியைத் துவக்கி வைத்தார். கபடிப் போட்டியில் புதுச்சேரி, லாஸ்பேட்டை, திருபுவனை, அபிஷேகப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 46 அணியினர் பங்கேற்று விளையாடினர்.
இறுதிப் போட்டியில், ஏ பிரிவில் புதுச்சேரி போலீஸ் அணியும், திருபுவனை அணியும் மோதின. போட்டியில் திருபுவனை அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு சங்க தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். யங்பிளட் கபடி சங்க தலைவர் கதிரவன் வரவேற்றார். கபடி சங்க பொதுச்செயலாளர் ஆரியசாமி முன்னிலை வகித்தார்.
மாநில தி.மு.க., பொருளாளர் அனிபால் கென்னடி, ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் கமலக்கண்ணன் நினைவுக் கோப்பை மற்றும் ரொக்கப் பணம் வழங்கி பாராட்டினர்.