திருப்பூர்: "தினமலர்' செய்தி எதிரொலியால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், "எலக்ட்ரானிக் டிஸ்பிளே' மற்றும் எல்.சி.டி., "டிவி'களில் ஒளிபரப்பு துவக்கப்பட்டுள்ளது. இதில், ரயில்களின் வருகை விவரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படுகின்றன.
சேலம் ரயில்வே கோட்டத்தில், அதிக வருவாய் ஈட்டும் ஸ்டேஷன்களில் திருப்பூர் இரண்டாமிடத்தில் உள்ளது. இங்கு டிக்கெட் விற்பனை மற்றும் பார்சல் அனுப்புவன் மூலம், ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
ரயில்களின் வருகை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, "எலக்ட்ரானிக் டிஸ்பிளே' செயல்படாமல் இருந்தது. இதுதொடர்பாக, கடந்த மாதம் 10ம் தேதி "தினமலர்' நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது. அவை இயங்குவதற்கான பணிகளை ரயில்வே துறை உடனடியாக துவக்கியது. "எலக்ட்ரானிக் டிஸ்பிளே', எல்.சி.டி.,"டிவி'களில் தற்போது ஒளிபரப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஸ்டேஷன் வளாகத்தில் உடனடி டிக்கெட் வாங்கும் இடத்தில், ரயில்களின் வருகை பற்றிய விவரங்கள், "எலக்ட்ரானிக் டிஸ்பிளே'யில் அறிவிக்கப்படுகிறது. அதே வளாகத்தில் உள்ள எல்.சி.டி., "டிவி'களில், முன்பதிவு டிக்கெட் காத்திருப்போர் பட்டியல் விவரங்கள் அறிவிக்கப்படுகின்றன. இரு பிளாட்பாரங்களில் வைத்துள்ள "எலக்ட்ரானிக் டிஸ்பிளே' பலகையில், ஒவ்வொரு ரயிலிலும் பெட்டிகள் விவரம் (கோச் பொசிஷன்) குறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது, ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ரயில்வே ஸ்டேஷன் முன்பு அமைத்துள்ள பெரிய "எல்ட்ரானிக் டிஸ்பிளே' போர்டு, இன்னும் செயல்படாமல் உள்ளது. அதையும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், ரயில்களின் பெயர், எண்கள் கொண்ட அறிவிப்பு பலகை வைக்கவும், நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.