கடலூர்:கடலூர் நகராட்சியில் நேற்று நடைபெற இருந்த நகரமன்ற கூட்டம் போதிய கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டது.கடலூர் நகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் 32 அ.தி.மு.க., 4 தி.மு.க., 3 பா.ம.க., காங்., 2 உறுப்பினர்களும், வி.சி., சுயேச்சை, தே.மு.தி.க., தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.நகரமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று காலை துவங்கியது. சேர்மன் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கமிஷனர் ரவி (பொறுப்பு) முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 24வது வார்டு உறுப்பினர் சகுந்தலா, 18 வது வார்டு வைதேகி, 26வது வார்டு விஜியகுமார், 36வது வார்டு கந்தன்,. 32வது வார்டு புஷபநாதன் ஆகிய 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.கூட்டத்திற்கு, போதிய "கோரம்' இல்லாததால் சேர்மன் மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைத்தார்.இதற்கிடையே, கடலூர் நகராட்சியில் கமிஷனர், உதவி பொறியாளர், வருவாய் அதிகாரி, அலுவலக மேலாளர், துப்புரவுப் பணியாளர்கள் என பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் அலுவலக பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. கடலூர் நகராட்சி சார்பில் செய்யப்படும் வளர்ச்சிப் பணிகள் ஒரே பெயரில் கான்ட்ராக்ட் எடுக்கப்படுகிறது.ஒரே ஒப்பந்ததாரரால் அனைத்து பணிகளையும் செய்ய முடியாத காரணத்தால் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதில்லை. பல ஒப்பந்தக்காரர்கள் கடலூர் நகராட்சியை விட்டு வேறு இடங்களில் டெண்டர் எடுத்து வேலை செய்கின்றனர்.சேர்மன் காலையில் நகர்வலம் வந்து மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை என அடுக்கடுக்காய் பல்வேறு புகார்களை கூறி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட பெரும்பாலான கவுன்சிலர்கள் நகர்மன்றக் கூட்டத்தை புறக்கணித்து திருமண மண்டபத்தில் திரண்டனர். அங்கு துணைத்தலைவர் குமார் தலைமையில் கூட்டம் நடந்தது.இது குறித்து நகராட்சி சேர்மன் சுப்ரமணியன் கூறியதாவது:காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசிதழில் வெளியிட்டு சாதனை படைத்த முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவும், கடலூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க கூட்டு குடிநீர் திட்டம் அறிவித்த முதல்வருக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவும் நேற்று சிறப்பு நகர்மன்றக் கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றக்கூட அ.தி.மு.க., உறுப்பினர்கள் பங்கேற்காதது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேசி தீர்க்கலாமே...
கடலூர் நகரத்தில் உள்ள மக்கள் பிரச்னைகளை நகர மன்றத்தில் பேசி தீர்வு காண்பதற்காக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். மாதம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் இந்த கூட்டத்தை அடிக்கடி கவுன்சிலர்கள் புறக்கணிப்பதால் மேலும் பணிகள் தாமதமாகுமே தவிர தீர்வு காண முடியாது. எனவே, கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று தமது கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு காண்பது தான் சிறந்த வழியாக இருக்க முடியும்.