சென்னை:"" நோயாளி சார் மருந்தாய்வில், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்,'' என, ராமச்சந்திரா பல்கலையின் ஆய்வுத்துறை தலைவர் தியாகராஜன் பேசினார்.சென்னை, போரூர் ஸ்ரீ ராமசந்திரா பல்கலை, அமெரிக்காவின் மியாமி பல்கலையுடன் இணைந்து, "நோயாளி சார் மருத்தாய்வில் நன்னெறிகளும், ஆய்வு முறைகளும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் சர்வதேச மாநாடு நேற்று துவங்கியது.மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில், கவர்னர் ரோசய்யா பேசியதாவது:மருந்தாய்வு குறித்த, உலகளாவிய கோட்பாடுகளையும், தரங்களையும் ஆய்வாளர்களுக்கு உணர்த்தி, பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலமே, மருந்தாய்வுகளில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் மேற்கொள்ளும் மருந்தாய்வுகளின் மொத்த மதிப்பீடு, 40 கோடி அமெரிக்கா டாலராக உயரும் வாய்ப்புள்ளது. தேசிய தரக் குறியீடுகள் இல்லாதது, உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு வரன்முறைகள் கடைப்பிடிக்காதது போன்றவற்றால், வளரும் நாடுகள் ஆய்வு துறையில் முன்னேற முடிவதில்லை.உயிரி மருத்துவம், மருந்தாய்வு ஆகிய துறைகளில், இக்குறைபாடு அதிகமாக உள்ளது. இந்நிலையில், ராமச்சந்திரா பல்கலைக் கழகம், மியாமி பல்கலையுடன் இணைந்து, உலகளாவிய பயிற்சி திட்டத்தின் கீழ், ஆய்வாளர்களுக்கு, மருந்தாய்வு குறித்த கல்வியும், பயிற்சியும் அளிப்பது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் பேசினார்.ராமச்சந்திரா பல்கலையின் ஆய்வுத் துறை தலைவர் தியாகராஜன் பேசியதாவது: நோயாளி சார் மருந்தாய்வில், ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோரின் ஒப்புதல், ஆய்வின் நடுவே விலகி கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்பட வேண்டும். மேலும், மருந்தாய்வின் மூலம் நோய் தீர்வுக்கான சாதகமான அம்சங்கள், மேலோங்கி இருக்க வேண்டும். இதுவே, சிறந்த மருந்தாய்வுக்கான அடிப்படை அம்சங்களாகும். இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டில், ராமச்சந்திரா பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, மியாமி பல்கலைக் கழக சர்வதேச செயல்பாடுகளுக்கான இயக்குனர் சர்ஜியோ லித்திவகா, அமெரிக்கா சுகாதார துறையின் மனித ஆய்வு பாதுகாப்பு பிரிவு துணை இயக்குனர் மெலோடி லின், ராமச்சந்திரா பல்கலை கழக வேந்தர், வெங்கடாசலம், மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு செயலர் சத்தியசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர்.இதில், மருந்தாய்வுகளில் சர்வதேச நெறிமுறைகள், மருந்தாய்வு கல்வியை சர்வதேச அளவில் தரம் உயர்த்தல், "ஸ்டெம் செல்' ஆய்வு மற்றும் சிகிச்சை குறித்த வழிகாட்டி முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது.