கடலூர்:""பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி அவசியமாகும்'' என சப் கலெக்டர் லலிதா பேசினார்.தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டம் சார்பில் உலக மகளிர் தின விழா கடலூரில் நடந்தது.கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் பால்ராஜ் வரவேற்றார்.சப் கலெக்டர் லலிதா பேசியதாவது:ஆண் குழந்தை பிறந்தால் வரவேற்பும், பெண் குழந்தை பிறந்தால் வெறுப்பையும் காட்டுவதால் பெண்களை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறார்கள். பெரும்பாலும், பெண்கள்தான் பெற்றோர்களை பாதுகாக்கின்றனர்.பெண்கள் சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நின்றால்தான் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும். இதற்கு பெண்கள் அனைவரும் கல்வி கற்பது அவசியம் என்பத உணர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகளவில் நடந்து வருகிறது. புகாரின் பேரில் 3 திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். இது போன்ற திருமணங்கள் நடந்தால் எங்களுக்கு புகார் செய்யவேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்த முடியும்.இவ்வாறு சப் கலெக்டர் லலிதா பேசினார்.முன்னதாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் மகளிர் திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.