திருப்பரங்குன்றம்:தமிழக அரசால், புராதன நகராக அறிவிக்கப்பட்ட மதுரை திருப்பரங்குன்றத்தில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சுற்றுலா துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலைமேல் செல்ல பலருக்கு விருப்பம் இருந்தும், வசதி இல்லாததால் அடிவாரத்திலுள்ள கோயிலுக்கு மட்டும் சென்று திரும்புகின்றனர். மலைமேல் நடந்து சென்று திரும்ப இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆவதால், அவர்கள் மலைமேல் செல்வதில்லை. வயதானவர்கள், நடக்க இயலாதவர்கள் மலைமேல் செல்வதில்லை.பகதர்தகள் வசதிக்காக அங்கு ரோப்கார் அமைக்க, 2004ல் முடிவு செய்து அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்தன. நிபுணர் குழு, சரவணப்பொய்கை அருகே புதிய படிக்கட்டு பகுதியில் இடம் தேர்வு செய்தனர். அடுத்த நடவடிக்கைகள் இல்லை. ரோப்கார் அமைக்க நடவடிக்கை தேவை.சரவணப்பொய்கையிலிருந்து தினம் அதிகாலை புனித நீர் எடுத்துச் சென்று, கொடிக்கம்பம் அருகேயுள்ள பலி பீடத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. தற்போது சரவணப் பொய்கை தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. அதை தூய்மைப்படுத்த வேண்டும். கோயில் வளாகத்தில் உள்ள லட்சமி தீர்த்த குளம் வறண்டு கிடக்கிறது. அங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கவும், தெப்பத்திருவிழா நடைபெறும், ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா காலத்தில் தண்ணீர் தேக்கவும் வசதி ஏற்படுத்த வேண்டும்.மலைக்குப்பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்திலுள்ள கல்வெட்டு குகை கோயிலை நவீனப்படுத்தவும், சமணர் படுகையை பாதுகாக்கவும், மக்கள் சென்று வரவும் வசதி ஏற்படுத்த வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்லும் கிரிவல ரோட்டை சீரமைக்கவும், ரோட்டில் இருபுறமும் நடைமேடை அமைத்து, பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்லவும் நடவடிக்கை தேவை.தென்பரங்குன்றத்தில் ஏராளமான மயில்களும், அபூர்வமான ஐந்து வெள்ளை மயில்களும் உள்ளன. அவைகளுக்கு உணவு போதுமானதாக கிடைக்காததால், வெளியிடங்களுக்கு செல்கின்றன. தென்பரங்குன்றம் ரோட்டை மயில்கள் கடக்கும்போது, வாகனங்களில் அடிபட்டு இறப்பதால், மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மயில்களின் பாதுகாப்பிடம் அமைக்க நடவடிக்கை தேவை.மலைமேல் செல்லும் புதிய படிக்கட்டுகள் அருகே நக்கீரர் குகை உள்ளது. அந்த குகையில்தான் நக்கீர திருமுருகாற்றுப்படை பாடினார். அந்த இடம் பராமரிப்பின்றி கிடக்கிறது. பக்தர்கள் கோயிலில் இருந்து மலையை சுற்றிவரும் வகையில் பேட்டரி கார்கள் இயக்கப்பட வேண்டும். மலைக்கு செல்லும் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் பலருக்கும் தெரியவில்லை. அக்கோயிலை விரிவுபடுத்தி தினம் ஐந்து கால பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கோயிலை மறைக்கும் மெகா கட்டடங்கள் உருவாவதை தடுக்க வேண்டும்.இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா துறை செய்யும்பட்சத்தில், திருப்பரங்குன்றத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.