கடலூர்:கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகளைக் களைய கூடுதல் பணியாளர்களை நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.கிராமப் பகுதியில் விவசாயம் செய்ய முடியாத காலங்களில் வேலை வழங்கக்கூடிய திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். துவக்க காலத்தில் இத்திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலையும், நாளொன்றுக்கு 119 ரூபாய் கூலி என நிர்ணயம் செய்யப்பட்டது.இந்தக் கூலி கட்டுப்படியாகாது என தொழிலாளர்கள் தரப்பில் போராட்டக் குரல் கொடுத்ததால் கூலித்தொகை 140 ரூபாயாகவும், வேலை நாட்களை 150 ஆகவும் உயர்த்தியது.
இத்திட்டத்தினால் கிராமப் பகுதியில் விவசாயம் பெரும் பாதிப்பிற்குள்ளானது. விவசாயக் கூலிகள் தேவைப்படாத தென்னை, சவுக்கு போன்ற பயிர்களை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தானிய உற்பத்தி கணிசமாகக் குறைந்தது. மேலும் இத்திட்டத்தில் ஊழல்கள் மலிந்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த இயலாமல் இத்திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.இந்நிலையில் அ.தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விவசாய திட்டங்களுக்கு மாற்றியமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கூலித் தொழிலாளர்களை வனத்துறை, அரசு பண்ணை, விவசாயிகள் என கூலியாட்கள் தேவைப்படுவோருக்கு கிராமப்புற வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டது.
தொழிலாளர்கள் முரண்டு:ஆனால், அவற்றில் உள்ள நடைமுறை சிக்கலினால் கூலித் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் முரண்டு பிடித்தனர். ஒரு சில கிராமங்களில் உள்ள நீர் நிலைகள், சாலைகள், ஏரிகள் போன்றவற்றை தூர் வாரி தூய்மைப்படுத்தி வருகின்றனர். மாவட்ட தலை நகரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில்லை.
காணாமல் போகும்தொழிலாளர்கள்:உதாரணமாக கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குட்டியாங்குப்பம் கிராமத்தில் கிராமப்புற வேலைத் திட்டத்திற்கு வருகை தந்த 30க்கும் மேற்பட்டவர்கள் பெயர் கொடுத்து விட்டு 14ம் தேதி கடலூரில் அரசியல் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அரசு அதிகாரிகள் திடீர் விசிட்டின் போது கூலித் தொழிலாளர்கள் பெயர் கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது வெளிச்சத்திற்கு வந்தது. இதே நிலைதான் மாவட்டம் முழுவதும் உள்ளது.
இது தவிர கிராமப் பகுதியில் ரேஷன் பொருட்களான மண்ணெண்ணை, சர்க்கரை, இலவச வேட்டி சேலை போன்றவை வழங்கும்போது வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து விட்டுச் செல்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.குழுவாக வேலைசெய்ய ஆர்மில்லை:இவற்றைத் தவிர்க்க தொழிலாளர்கள் 20 பேர் கொண்ட குழுவாக பிரித்து வேலை செய்ய வேண்டும். இந்த குழு வேலை செய்ததை வார இறுதியில் மொத்தத்தில் அளவீடு செய்து கூலி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கிராமத்திலேயே உள்ள பணித்தள பொறுப்பாளர்கள் இந்த அளவீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் என உத்தரவிட்டது.அதன்படி பணித்தள பொறுப்பாளர்களோ, அதிகாரிகளோ கண்காணிப்பதில்லை. இதைத் தடுக்கும் விதத்தில் வேலைக்கு வருகை தரும் தொழிலாளர்கள் "பயோ மெட்ரிக்' முறையில் கைரேகை பதிவு செய்யவும், அவர்களுக்குரிய ஊதியம் சேதாரமின்றி தொழிலாளர்களுக்கு சென்று சேர வங்கிக்கணக்குகள் துவக்கப்பட்டு அதன் மூலம் பட்டுவாடா செய்யவும், இவற்றை ஒட்டு மொத்தமாக கண்காணிக்க கூடுதல் பணியாளர்களை நியமிப்பதென அரசு பரிசீலித்து வருகிறது.